உணர்வுகளை வெளிப்படுத்துவது மூளையின் பல தொழிற்பாடுகளில் ஒன்று. தேவையான நேரத்தில் உகந்த ஹோர்மோன் சுரப்புக்களைச் செய்வதன் மூலம் உணர்வுகளைக் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்துவதில் மூளை பெரும்பங்கு வகிக்கிறது. இக் கட்டுபாட்டில் பிசகு ஏற்படும்போது வெளிப்படும் ஒழுங்கற்ற உணர்வு மன அழுத்தம் என விபரிக்கப்படுகிறது.
மன அழுத்தத்தின்போது பெரும்பாலும் தொடரும் எதிர்மறையான எண்ணங்கள் அடிக்கடி உறுத்திக்கொண்டிருக்கும். இவ்வெதிர்மறை உணர்வுகள் சமூகம், கல்விச் சூழல், தனிப்பட்ட உறவுகள், குடும்ப உறவு போன்ற பல விடயங்களில் மிகவும் பாதகமான நிலைகளை ஏற்படுத்திவிடுகின்றன.
மன அழுத்தத்தைப் பலரும் சரியாக இனங்காண்பதில்லை. அதனால் அதற்கான சிகிச்சைகளையும் உரிய காலத்தில் மேற்கொள்வதில்லை.
மன அழுத்தம் சோகம் (sadness), மன உடைவு (feeling down) போன்ற சாதாரண உணர்வு நிலைகளின் வெளிப்பாடல்ல. அது மூளையின் கட்டுப்பாடட்டில் ஏற்படும் பிசகினால் ஏற்படும் ஒரு மருத்துவப் பிரச்சினை (medical condition). மன அழுத்தம், ஒருவர் சிந்திக்கும், உணரும், செயற்படும் முறைகளைப் பாதிக்கிறது. அவர் உலகைப் பார்ப்பதும் அனுபவிப்பதும் எப்போதும் எதிர்மறையானதாகவே இருக்கிறது.
மன அழுத்தம் ஏற்படும்போது அது பல மாதங்கள் நீடிக்கலாம். இதை மன அழுத்தத்தின் ஒரு அத்தியாயம் (episode of depression) எனச் சிலர் வர்ணிப்பதுண்டு. மன அழுத்ததுக்குள்ளாகும் பலர் தம் வாழ்நாளில் பல ‘அத்தியாயங்களைச் சந்தித்திருப்பர்.
சிலரது வாழ்வில் ஏற்படும் அதிர்சி தரும், துன்பகரமான சம்பவங்கள் (மிகவும் நேசித்த ஒருவரின் இழப்பு, நீண்டகால மன இறுக்கம் போன்றன) மன அழுத்தத்தின் ஒரு அத்தியாயத்தைக் கிளறிவிடுகின்றன, இருப்பினும் பின்னர் பல அத்தியாயங்கள் தாமாகவே தோற்றம்பெறுகின்றன. அது பொதுவாக மனப் பதட்டத்துடன் (anxiety) சேர்ந்தே ஏற்படுகிறது. குடும்பம், நண்பர்கள், வேலை, பாடசாலை எனப் பல விடயங்களையும் மன அழுத்தம் வெகுவாகப் பாதிக்கிறது.
பதின்ம வயதில் மன அழுத்தம் (Teen Depression)
பதின்ம வயதில் ஏற்படும் மன அழுத்தம் தீவிர மனநிலைத் தளும்பல்கள் (mood swings), மற்றும் எதிலும் ஆர்வமின்மை போன்ற அறிகுறிகளைக் காட்டுகின்றன. மன அழுத்தம் ஒரு பதின்ம வயது ஆணோ பெண்ணோ சிந்திப்பதிலும், உணர்வதிலும், நடத்தையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் வாழ்வின் எந்தப் பருவத்திலும் தாக்காலாமெனினும், அவற்றின் அறிகுறிகள் பதின்ம வயதினருக்கும் முதியோருக்குமிடையில் வேறுபடுகின்றன.
பாடசாலைகள் பதின்ம வயதினரின் மன அழுத்த உருவாக்கத்துக்கு மிகவும் உகந்த விளைநிலமாக இருக்கின்றன. தோழமை அழுத்தங்கள் (peer pressure), கல்வியில் உயர் பெறுபேறுகளின் எதிர்பார்ப்புகள் (academic expectations), உடலில் ஏற்படும் பெளதீக மாற்றங்கள் (changing bodies) போன்றன பதின்ம வயதினரில் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டுவருகின்றன. இறக்கங்கள், சில பதின்ம வயதினருக்கு, தற்காலிக உணர்வு மாற்றங்கள் என்பதிலிருந்து மன அழுத்தத்தின் வெளிப்பாடுகளாக மாறுகின்றன.
பதின்ம வயதில் ஏற்படும் மன அழுத்தம் ஒரு பலவீனமோ, அல்லது மனப் பலத்தினால் வென்றுவிடக்கூடிய ஒரு விடயமோ, அல்ல. அது மோசமான விளைவுகளை உருவாக்க வல்லது. நீண்டகால சிகிச்சை தேவைப்படுமொன்று. பல பதின்ம வயதினரின் மன அழுத்தம் மருந்தினாலும், உள வள ஆலோசனைகளாலும் தீர்க்கப்பட்டிருக்கிறது.
அவதானிக்கக்கூடிய மாற்றங்கள்
பதின்ம வயதினரில் ஏற்படும் மன அழுத்தத்தின் அறிகுறிகள் பல. பதின்ம வயதினர் ஒருவரின் மனப்பாங்கில் (attitude) மற்றும் நடத்தை (behaviour) ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், நட்புச் சூழலிலோ, வீட்டிலோ, சமூகக் கூடல்களிலோ இதர சூழல்களிலோ உடனடியாக அவதானிக்கப்படக் கூடியவை. மன அழுத்தத்தின் அறிகுறிகள் அவற்றின் தீவிரத்தில் மாறுபடலாம். ஒரு பதின்ம வயதினரின் மனநிலையிலோ, நடத்தையிலோ ஏற்படும் மாற்றங்கள் சில:
உணர்வுநிலை மாற்றங்கள்:
மனச் சோர்வு, காரணமில்லாது அழுதல்
சிறிய விடயங்களுக்கும் கோபமும் விரக்தியும் ஏற்படுதல்
வெறுமையும், எதிலும் நம்பிக்கையீனமும்
காரணமில்லது எரிந்து விழுதல்
இயல்பான செயற்பாடுகளிலோ, குடும்ப விடயங்களிலோ, நண்பர்களிடமோ ஆர்வமில்லாதிருத்தல்
சுய மரியாதையீனம், தன்மீது வெறுப்பு, தான் பயனற்றவரென உணர்தல், குற்ற உணர்வு
முந்திய தவறுகளை மீண்டும் நினைவு மீட்டல், தேவைக்கதிகமாக தற்பிழை கற்பித்தல், சுய விமர்சனம் செய்தல்
தவறுகள், நிராகரிப்புகள் விடயத்தில் அதீத கவனம் கொள்ளல், மித மிஞ்சிய ஐயம் தெளிதல்
சிந்திப்பதில், மனக்குவிப்பில், முடிவுகளை எடுப்பதில், ஞாபகம் வைத்திருப்பதில் சிரமப்படுதல்
எதிர்காலம் இருண்டது, பிரகாசமற்றது எனத் தொடர்ந்து எண்ணுதல்
இறப்பும், தற்கொலையும் அடிக்கடி நினைவில் வரல்
நடத்தை மாற்றங்கள்:
இலகுவில் களைத்துப்போதல், பலவீனமாக உணர்தல்
தூக்கமின்மை அல்லது அதிகமாகத் தூங்குதல்
பசியில் மாற்றங்கள் – பசியின்மையால் சாப்பிடாது உடல் மெலிதல் அல்லது பசியினால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமனாதல்
மது அல்லது போதை வஸ்து பாவித்தல்
பதட்டப்படுதல் அல்லது துடிப்பு அதிகமாதல் (சுற்றிச் சுற்றி குறு நடை நடத்தல், கைகளை அடிக்கடி முறுக்கிக் கொள்ளல், ஓரிடத்தில் தொடர்ந்து இருக்க முடியாதிருத்தல்)
வேகமாகச், சிந்திக்க, பேச அல்லது உடலசைவுகளை மேற்கொள்ள முடியாமை
விளக்க முடியாத உடல் வலியும் தலை வலியும்; அடிக்கடி பாடசாலைத் தாதியிடம் செல்வதும்
தனிமையை விரும்புவது
கல்வியின் பெறு பேறுகளில் வீழ்ச்சி
பாடசாலை செல்வதில் ஒழுங்கீனம்
சுய ஆரோக்கியத்திலோ தோற்றத்திலோ அக்கறையின்மை
கோபத்தில் பிறரில் எரிந்து விழுதல், தன்னைத் தானே சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், வழக்கத்துக்கு மாறான வகைகளில் நடந்துகொள்ளல்
சுய துன்புறுத்தல் (தன்னைத் தானே வெட்டிக்கொள்தல், எரித்துக் கொள்தல், தேவைக்கு அதிகமாக உறுப்புகளில் துவாரங்களை இட்டுக் கொள்ளல் அல்லது பச்சை குத்திக் கொள்தல்
தற்கொலைக்குத் திட்டமிடுதல் அல்லது முயற்சித்தல்
எது சாதாரணமானது அல்லது சாதாரணமற்றது?
பதின்ம வயதினரின் நடத்தைகள் பொதுவாகவே ஏற்ற இறக்கங்களைக் கொண்டவை. தமக்குத் தேவையான அல்லது விருப்பமான நிகழ்வுகள் நடைபெறாதபோது இறக்கங்களையும், நடைபெறும்போது ஏற்றங்களையும் வெளிக்காட்டுவது இயல்பு. இதனால் மன அழுத்தம் காரணமாக வெளிப்படும் ஏற்ற இறக்கங்களையும் இயல்பானவையென எடுத்துவிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.
பதின்ம வயதினரில் மாற்றங்களை அவதானிக்க முடிந்தால் அவர்களுடன் உரையாடுவது நல்லது. அவை சாதாரண பதின்ம வயதிற்கு இயல்பாக ஏற்படும் மாற்றங்களாயினும் சரி, மன அழுத்தத்தினால் ஏற்படும் மாற்றங்களாயினும் சரி அவர்களுடன் உரையாடி அம் மாற்றங்களைச் சமாளிக்க அவர்களால் முடிகிறதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அவர்களது வாழ்க்கையில் தாங்கமுடியாத சுமைகள் ஏதாவது இருக்கின்றனவா எனபதை விசாரிக்க வேண்டும்.
எப்போது மருத்துவரைப் பார்ப்பது?
பதின்ம வயதினரில் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் தெரியவாரம்பித்ததும் அவரகளுடன் உரையாடலை உடனேயே ஆரம்பிப்பது நல்லது. ஒரு மருத்துவருடன் அல்லது உள நல சேவையாளருடன் பேசுவது நல்லது. பதின்ம வயதுப் பிள்ளையின் குடும்ப வைத்தியர் அல்லது பாடசாலையால் பரிந்துரைக்கப்படும் வைத்தியரை முதலில் அணுகுவது நல்லது. மன அழுத்ததின் அறிகுறிகள் தாமாகவே தீர்ந்து விடுவனவல்ல. சிகிச்சையளிக்காது போனால் அது மேலும் பல மோசமான விளைவுகளுக்குக் காரணமாகிவிடலாம்.
நீங்கள் ஒரு பதின்ம வயதினராக இருந்து மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதினாலோ அல்லது உங்களது நண்பரோ நண்பியோ மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறாரென அறிந்தாலோ உடனே மருத்துவ உதவியை நாடுங்கள். உங்கள் மருத்துவர் அல்லது பாடசாலைத் தாதியை முதலில் அணுகுங்கள். உங்கள் ஆதங்கங்களைப் பெற்றோரிடமோ, உற்ற நண்பரிடமோ, ஆசிரியரிடமோ அல்லது நீங்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவரிடமோ தெரிவியுங்கள்.
மன அழுத்தத்திற்கான காரணங்கள்
மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் இதுவரைக்கும் அறியப்படவில்லை ஆனால் சில விடயங்கள் மீது ஊகங்கள் எழுப்பப்படுகின்றன. அவை:
மூளையின் இரசாயனம் (Brain chemistry). நரம்பணுக்கடத்திகள் (Neurotransmitters) எனப்படுபவை இயற்கையாக மூளையில் ஏற்படும் இரசாயனப் பொருட்கள். மூளையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கோ அல்லது உடலின் இன்னொரு பகுதிக்கோ சமிக்ஞைகளைக் (signals) கடத்துபவை இவைதான். இவ்விரசாயனப் பொருட்களில் ஏதாவது குளறுபடி ஏற்படும்போது நரம்பணுத் தொகுதியின் செயற்பாடு குழப்பமடைந்து மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கிறது.
ஹோர்மோன்கள் Hormones. ஹோர்மோன்கள் மூளையின் கட்டுப்பாட்டினால் சுரக்கப்படும் பதார்த்தங்கள். இவை கட்டுப்பாட்டிற்குள் (சமநிலையில்) இருக்கும்போது உடலின் தொழிற்பாடுகள் சரியாகவிருக்கும். சமநிலையில் தளம்பல் ஏற்படும்போது, சில வேளைகளில் மன அழுத்தம் ஏற்படுகிறது.
பரம்பரைத் தொடர்ச்சி Inherited traits. குடும்பத்தில் (தாய் / தந்தை) பக்கத்தில் யாருக்காவது மன அழுத்தம் வந்திருந்தால் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அது வருவதற்குச் சாத்தியமுண்டு.
குழந்தைப் பருவத்தில் ஏற்படும் அதிர்ச்சி Early childhood trauma. குழந்தைப் பருவத்தில் அதிர்ச்சிதரும் சம்பவங்கள்( பெற்றோரை இழத்தல்), உடல் / உள ரீதியான துர்ப்பிரயோகங்கள் போன்றவை நடைபெற்றிருந்தால் அவை மூளையில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இப்படியானவர்களில் சிலர் பிற்காலத்தில் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.
எதிர்மறையான எண்ணங்களைக் கற்றுக்கொள்தல் Learned patterns of negative thinking. பதின்ம வயதினரின் மன அழுத்தம், சில வேளைகளில் ‘நிர்க்கதியாகிவிட்டோம்’, ‘தனிமைப்படுத்தப்பட்டுவிட்டோம்’, ‘உதவியற்றவராகிவிட்டோம்’ என்பது போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொள்ள இடமளிப்பதன் மூலம், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாது தப்பியோடும் மனப்பான்மை வேரூன்ற அனுமதிப்பதன் மூலமும் ஏற்படுகிறது.
ஆபத்துக் காரணிகள் Risk factors
பல காரணிகள் பதின்ம வயதினரில் மன அழுத்தத்தை உருவாக்கவோ அல்லது கிளறிவிடவோ செய்கின்றன. அவை:
உடற் பருமன் (obesity), தோழமைப் பிரச்சினைகள் (peer problems), நீண்டகாலமாகக் கொடுமைப்படுத்தப்படல் (long-term bullying), கல்வியில் வெற்றி காணாமை ஆகியவை ஒருவரின் தற்பெருமையை (self-esteem) வெகுவாகப் பாதிக்கின்றன.
உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ பாதிக்கப்பட்டிருத்தல்
இதர உள வளப் பிரச்சினைகள், உதாரணமாக, இரு-துருவக் கோளாறு (bipolar disorder), பதட்டம் (anxiety), பசியின்மையால் உண்ணாதிருத்தல் (anorexia) அல்லது பெரும்பசியால் அதிகமுண்ணுதல் (bulimia)
கற்கை இயலாமை (learning disability), கவனக்குறைவு (attention-deficit) / அதிதுடியாட்டம் (hyperactivity) (ADHD)
நீண்டகால வியாதிகளால் ஏற்படும் உடல் வலி ( புற்றுநோய், நீரழிவு, தொய்வு)
ஆளுமைப் பிரச்சினைகள் (தற்பெருமைக் குறைவு, இன்னொருவரில் தங்கியிருத்தல், தன்னில் குறை காணுதல், நம்பிக்கையீனம்)
மது, புகைத்தல், போதை வஸ்து பாவனைகள்
பாலியல் பிரச்சினைகளை (ஒருபால் மோகம், பாலடையாளம்) எதிர்கொள்வதற்கேற்ற சூழல் அமையாமை
குடும்பத்தில் பின்வரும் வியாதிகள் / குறைபாடுகள் இருந்திருந்தால் உங்கள் பதின்ம வயதுப் பிள்ளை, பேரப்பிள்ளைகளுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடிய சாத்தியங்களுண்டு:
பெற்றோர், அவர்களின் பெற்றோர் அல்லது இரத்த உறவுகள் யாராவது மன அழுத்தம், இரு-துருவக் கோளாறு அல்லது போதைக்கு அடிமையாகும் பழக்கங்களுக்கு உள்ளாகியிருந்தமை
யாராவது குடும்ப உறவினர் தற்கொலை செய்துகொண்டமை
பெற்றோர் பிரிந்து வாழ்ந்தமை அல்லது தொடரும் குடும்பப் பிரச்சினை
குடும்பத்தில் பிரிவு, இறப்பு போன்ற அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றமை
சிக்கல்கள் Complications
சிகிச்சை பெறாத மன அழுத்தம் பதின்ம வயதினரின் வாழ்வின் இதர பக்கங்களையும் தீவிரமாகப் பாதிக்க வாய்ப்புண்டு. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் சில:
மது அல்லது போதை வஸ்துவுக்கு அடிமையாதல்
கலவியில் பின்தங்கல்
குடும்பப் பிரச்சினைகள், உறவு நீடிப்பில் பிரச்சினைகள்
குற்றவியற் பிரச்சினைகளுக்குள் சிக்குதல்
தற்கொலை முயற்சிகள் அல்லது தற்கொலை செய்துகொள்ளல்
தவிர்ப்பு Prevention
மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கு உகந்த வழிகள் என்று எதையும் சொல்வதற்கில்லை. இருப்பினும் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அவற்றில் சில:
மன இறுக்கத்தைத் (stress) தவிர்க்க முயலுங்கள். தற்பெருமையை வளர்த்து, பிரச்சினைகள் தோன்றும்போதே தீர்த்துக்கொள்ள முயற்சியுங்கள், தாங்கும் திறனை (resilience) வளர்த்துக் கொள்ளுங்கள்
நல்ல நண்பர்களையும், சமூகச் சூழலையும் உருவாக்கி பிரச்சினை வரும்போது அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுங்கள்
பிரச்சினையின் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். மன அழுத்தம் மோசமாவதை அது குறைக்கும்.
பரிந்துரைக்கப்பட்டால், அறிகுறிகள் நின்றபோதும் கூட சிகிச்சையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளுங்கள். நோய் திரும்பி வராமல் இருப்பதற்கு இது அவசியம்.
எப்போது அவசர சேவைகளை நாடுவது?
தற்கொலை, பெரும்பாலும் மன அழுத்தத்துடன் தொடர்புடையது. தற்கொலை செய்யவேண்டுமென்ற உணர்வு எப்போதாவது உறுத்துமானால் உடனே 911 ஐ / அவசர அழைப்பிலக்கத்தை அழையுங்கள் அல்லது உங்கள் பெற்றோரையோ, நீங்கள் நேசிக்கும் ஒருவரையோ அல்லது உற்ற நண்பரையோ அழையுங்கள்.
No comments:
Post a Comment