"இங்கு சமூகம் தந்திருக்கும் அனைவரையும் வருக, வருக என வாழ்த்துகிறோம்” என்ற சம்பிரதாயபூர்வமான வார்த்தையை கிளிப்பிள்ளை போன்று பல தடவைகள் கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கி விடுவதுதான் வரவேற்புரை என பலரும் கருதுவதுண்டு. யாரையாவது மேடைக்கு ஏற்றிவிடலாம் என நினைத்து நிகழ்ச்சித் திட்டத்தில் வரவேற்புரைக்கு பெரியளவிளான வைட்- பெருமானம் வழங்கப்படுவதில்லை. இதன் முக்கியத்துவத்தை அறிந்திருப்பதும் எவ்வாறு அந்த உரையை சிறப்பாகவும் கவர்ச்சியாகவும் அமைக்கலாம் என்பதற்கான சில கருத்துக்களை பகிர்ந்துகொள்வதுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
வரவேற்புரை என்பது அறிமுகவுரை. அதில் வரவேற்பும் இடம்பெற வேண்டும் என்பதுவே சரியான வடிவமாக இருக்கும். குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்போருக்கும் அதன் விருந்தினருக்கும் நிகழ்ச்சி தொடர்பாக அறிமுகத்தை வழங்கும் நோக்கோடு ஏற்பாட்டுக் குழு சார்பாக ஒருவர் வழங்கும் சிறிய உரை வரவேற்புரை எனப்படுகிறது. அதிதிகளுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோருக்கும் நிகழ்வு பற்றிய போதிய அறிமுகம் சிலபோது இல்லாமல் இருக்கும். எனவே, எமது வரவேற்புரை அந்த இடைவெளியை பூரணப்படுத்தி உளரீதியான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துவதாக அமையவேண்டும்.
ஒரு விழா, நிகழ்ச்சி, சந்திப்பு, விரிவுரை, நிகழ்வு, கலந்துரையாடல், கூட்டம் எதுவாக இருந்தாலும் அதிலே முதலாவதாக இடம்பெறுவது வரவேற்புரை அல்லது அறிமுகவுரை. இந்த உரைதான் நிகழ்வை ஆரம்பித்துவைக்கிறது. கலந்துகொண்டிருப்போருக்கு இது ஒரு வோர்ம் அப் – warm up. நிகழ்ச்சி முடியும் வரை அவர்களை உட்சாகத்தோடு அமரச்செய்வதற்கான மனத்தயாரிப்பை ஏற்படுத்துவது இந்த உரைதான். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தை அவர்களில் ஏற்படுத்துகிறது. தொடர்ந்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பயனுள்ளதா என தீர்மானிக்கும் உரையும் இதுவாகத்தான் இருக்கமுடியும். எங்கேயோ உள்ள ஒரு வேளை மனதுக்குள் சட்டென்று வந்துவிட உடனே சில நியாயங்களை மனதில் ஏற்படுத்தி நிகழ்ச்சியின் நடுவே எழும்பிச் செல்லாமல் உட்காரச் செய்ய இந்த உரைக்கு பெரும் பங்குண்டு. வெள்ளிக்கிழமை ஜும்மாவுக்கு செல்லும் சிலர் இடையில் எழும்பிச்செல்ல முடியாமையால் பிரசங்கத்தின் ஆரம்பத்திலேயே தூங்குவதா இல்லையா என்பதைத் தீர்மானித்துவிடுவதை நாம் பார்க்கிறோம்.
வரவேற்புரை அல்லது அறிமுகவுரை சிறிதாக இருந்தாலும் அதன் உள்ளடக்கம் செறிவானதாக அமையப்பெற்றிருக்க வேண்டும். சுமார் 600 பக்கங்களைக் கொண்ட அல்குர்ஆனில் முன்னுரையாகக் காணப்படுகின்ற ஸுரதுல் பாதிஹா வெறும் கால் பகுதிதான். ஆனால், அல்குர்ஆனின் சகல கருத்துக்களையும் உள்ளடக்கிய சாரம்சமாகவும் அறிமுகமாகவும் அது காணப்படுவதைப் பார்க்கலாம். அதன் கருத்துக்களை விளங்கும் ஒருவர் அல்குர்ஆனை முழுமையாக வாசிக்கவேண்டும் என்ற உணர்வைப்பெறுவார்.
ஆகவே, வரவேற்புரையின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளும் நாம் ஒரு சிறந்த, பலராலும் கவரப்படுகின்ற ஓர் உரையாக அமைத்துவிட கீழ்வரும் விடயங்களை கவனத்திற்கொள்வது அவசியமாகின்றது.
நிகழ்ச்சியின் இயல்பைப் புரிதல்
உரையின் உள்ளடக்கத்தை வடிவமைத்தல்
சொற்கள், பதங்களின் உபயோகம்
உரையைத் திட்டமிடல்
நிகழ்ச்சியின் இயல்பைப் புரிதல்
ஒவ்வொரு நிகழ்ச்சியும் அது நடாத்தப்படும் இடம், நேரம், பார்வையாளர் வகையினர், நடாத்துபவர் யார் என்பதற்கு ஏற்ப அதன் இயல்பு வேறுபடும். திறந்த வெளியில் நடாத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றுக்கும் நான்கு பக்கங்களினால் அடைக்கப்பட்ட நிகழ்ச்சிக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. பகல் வேளையில் நடாத்தப்படும் நிகழ்ச்சியிலிருந்து இரவு வேளை நிகழ்ச்சி வித்தியாசப்படுகிறது. சூரிய வெளிச்சத்தின் இயல்பிலிருந்து சந்திர ஒளி வேறுபடுகிறது. மாணவர்களுக்கான நிகழ்ச்சியும் பெற்றோருக்கான நிகழ்ச்சியும் ஒரே மாதிரியாக இருக்காது.
கலந்துகொள்வோரின் பொதுவான விருப்பு, கலந்துகொள்வதற்கான காரணம் போன்றவற்றை ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றாக தெரிந்திருக்கும். அது ஸீரியஸ்ஸான ஒன்றா, நகைச்சுவை மிக்கதா அல்லது இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்றா என்பதைக் கருத்திற்கொண்டு உரையின் மொழியையும் தொனியையும் அமைத்துக்கொள்ளலாம்.
சிரமப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்ச்சியின் அடைவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு நிகழ்ச்சியின் இயல்பை புரிந்திந்திருப்பது வரவேற்புரைய நிகழ்த்துபவரின் முக்கிய பொறுப்பாகும்.
உரையின் உள்ளடக்கத்தை வடிவமைத்தல்
உரையின் போகஸ் எமது அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கும் விருந்தினர் மற்றும் பார்வையாளர்கள் மீதே இருக்க வேண்டும். அவர்களை மையப்படுத்தியதாகத்தான் உரை அமைந்திருக்க வேண்டும். ஏற்பாட்டுக் குழுவினர் மீது அல்லது எமது நிகழ்ச்சித் திட்டம் பற்றி நன்கறிந்த எமது உறுப்பினர் மீது எமது முழுக் கவனமும் செல்லுமாக இருந்தால் உரையின் எதிர்பார்ப்பும் நிகழ்ச்சியின் நோக்கமும் பிழைத்துச் செல்லும்.
சொல்லப்படும் தகவல்கள் பொஸிடிவ் ஆக அமையப் பெற்றிருக்கு வேண்டும் என்பது அடிப்படை. சுருக்கமாகவும், எளிய முறையிலும் உண்மையாகவும் உரையை நிகழ்த்துவது அளுப்பை ஏற்படுத்தாது. எல்லா உரைகளும் விருந்தினரையும் பார்வையாளரையும் விழித்து வரவேற்றுதான் ஆரம்பிக்கப்படுகிறது. நிகழ்வில் ஒரு விஷேட அதிதி இருப்பதாக இருந்தால் கட்டாயம் அவரை தனியாக விழித்து நிகழ்வில் கலந்துகொள்வதற்கு நன்றி கூற வேண்டும். அவருக்குரிய மரியாதை உரிய முறையில் வழங்கப்படாவிட்டால் உரை நிகழ்த்துபவர் மீதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் இனம்புரியாத வெறுப்பு அவரில் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. அத்துடன், ஏற்பாட்டாளர் மீது நல்லபிப்பிராயமும் இல்லாமல் செல்லும். ஆனால், அதனை அவர் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். பொதுவாக சகல விருந்தினரையும் அவர்களது வருகைக்கு நன்றி கூறி வரவேற்பது நல்ல ஆரம்பமாக இருக்கும். மேலும், உலமாக்கள், அதிதிகள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், சகோதர, சகோதரிகள் என ஏதோ ஒரு வட்டத்துக்குள்ளால் தாங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றுதான் சமூகம் தந்திருக்கும் ஒவ்வொருவரும் விரும்புவார்கள். இந்த உளவியலை அறிந்து வைப்பது முக்கியமானது.
நடைபெறும் நிகழ்வு பற்றிய சிறிய அறிமுகம் வழங்கப்பட வேண்டும். அதன் பெயரையும் குறிப்பிட்டு வருடாந்தம் நடைபெறும் நிகழ்வாக இருப்பின் கடந்த வருடம் நடைபெற்ற நிகழ்ச்சியை ஞாபகப்படுத்துவது கலந்துகொள்வோருக்கு ஒரு மீட்டளாக காணப்படும். நிகழ்ச்சி தொடர்பில் போதிய பின்னணியைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்யும்.
முக்கியமாக கலந்துகொள்ளும் விருந்தினர் பற்றிய சிறிய அறிமுகம் அங்குள்ளவர்களுக்கு வழங்கப்படுதல் நல்லது. அது அவரை கௌரவித்ததாகவும் அவரது அறிமுகத்தை வருகை தந்திருப்போருக்கு அறியச் செய்ததாகவும் இருக்கும். பொருத்தமாக இருப்பின் அடுத்து பேச இருப்பவர்களையும் நிகழ்ச்சி நிரலையும் சுருக்கமாக சொல்லி வைக்கலாம். பார்வையாளர்களுக்கு ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் அது ஏற்படுத்தும்.
உரையின் ஆரம்பத்தில் அல்லது இறுதியில் முக்கியமான மேற்கோள்களை, சுவாரஷ்யமான நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். வந்திருப்போருக்கு இது ஓர் உத்வேகத்தை உண்டாக்கும். நிகழ்ச்சி பற்றிய ஞாபகத்தை அவர்களிடத்தில் என்றும் ஏற்படுத்தும். உரையின் இறுதியில் உங்கள் உரையை செவிமடுத்தற்காக நன்றிசொல்லி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வின் மூலம் பயன்பெறுவீர்கள் என எதிர்பார்ப்பதாகவும் சொல்ல முடியும்.
சொற்கள், பதங்களின் உபயோகம்
எமது உரையில் நல்ல சொற்களை, பதங்களைப் பயன்படுத்துவது போன்றே ஒத்த கருத்தைத் தருகின்ற பல வகையான பிரயோகங்களை உபயோகிப்பதும் நல்லது. ஒரே சொற்களை, பதங்களை தொடர்ந்தும் பயன்படுத்துவது எமது உரையின் மதிப்பைக் குறைத்துவிடும். பழைய வழிமுறைகளை தொடர்ந்தும் பயன்படுத்தாது மாற்று வழிமுறைகள் பற்றி சிந்திப்பது நல்ல வரவேற்பை ஏற்படுத்தும்.
சில சமயங்களில் உடனடியாக சொற்கள் எமது நாவுக்கு வராமல் மேடையில் தடுமாறுவோம். அதனை மறைப்பதற்கு இருமல் வருவது போன்று நடித்து பலவாறு முயற்சிப்போம். எனவே, தவிர்க்க முடியாமல் ஒரே சொல்லை அல்லது பதத்தை திரும்பத் திரும்ப பாவிப்போம்.
”வரவேற்கின்றோம்” என்ற வினைக்கு முன்னால் பொருத்தமான பல்வேறுபட்ட வினையடைகளைப் பயன்படுத்துவது எமது உரைக்கு வலுவூட்டும். உதாரணமாக இதயபூர்வமாக, மனப்பூர்வமாக, மகிழ்ச்சியோடு, சந்தோஷமாக, இனியமுறையில், இன்முகத்தோடு, பாசத்தோடு, கனிவோடு, நட்போடு, சிறந்த முறையில், உள்ளத்தில் ஆழத்தால் வரவேற்கின்றோம் எனக் கூறலாம்.
அதேபோன்று ”அதிதிகள்” என்பதற்கு முன்னால் கௌரவத்துக்குரிய, அன்புக்குரிய, நேசத்துக்குரிய, மதிப்புக்குரிய, மிகவும் விரும்பக்கூடிய, பிரபல்யமான, எதிர்பார்த்த, நிபுணத்துவமிக்க, மேன்மைதாங்கிய, புகழ்பெற்ற, பாராட்டுக்குரிய, மக்களால் விரும்பப்படுகின்ற போன்ற அடைமொழிகளைப் பயன்படுத்தலாம்.
அதிதிகள் யார் என்கின்ற போது, அவர்கள் நீதிபதிகள், பொருளியலாளர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், வைத்தியர்கள் போன்ற தொழில் ரீதியாக உயர் பதவி வகிப்போராக இருக்கலாம் அல்லது நிறுவனங்களின் பணிப்பாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள், ஒன்றாக தொழில் பார்க்கும் நண்பர்கள், வகுப்பு நண்பர்கள், பார்வையாளர்கள், மாணவர்கள், சகோதரர்கள், சகோதரிகள் யாராகவும் இருக்கலாம்.
இங்கு முக்கியம் என்வென்றால் எந்த சொற்களை, பதங்களைப் பயன்படுத்தினாலும் அவை கலந்துகொள்வோரின் உள்ளத்தில் இனம்புரியாத ஓர் ஆனந்த கீறலை ஏற்படுத்த வேண்டும்.
உரையைத் திட்டமிடல்
எந்தவொரு விடயத்தையும் மூலையில் சேகரித்து வைத்துவிட்டு மேடையில் ஒப்புவிக்க முயல்வது ஆபத்தானது. வரவேற்புரைக்கு தேவையான சகல தகவல்களும் சரியான முறையில் உள்ளதா என சரிபார்த்து எழுத்தில் வைத்துக்கொள்வது பாதுகாப்பான வழிமுறையாகும்.
எனவே, கீழ்வரும் தகவல்களைப் பெற்றுக்கொள்வது எமது உரையை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கொள்வதற்கு வழியமைக்கும்.
நிகழ்ச்சியின் நடாத்தும் நிறுவனத்தின் பெயர்
அதன் முக்கிய அடைவுகள், இலக்குகள்
நிகழ்ச்சியின் பெயர்
நிகழ்ச்சி மூலம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அடைவுகள், நோக்கம்
திகதி, இடம்
எவ்வளவு நேரம் நிகழ்ச்சி நடைபெறும்
நிகழ்ச்சியோடு தொடர்பான முக்கியமானவர்களின் தொ.பே. இலக்கம்
அதிதிகளை அறிமுகப்படுத்த அவர்களது பெயர்? (அவர்களது பெயர் உரிய முறையில் உச்சரிக்கப்பட வேண்டும், பதவிகள் சரியான முறையில் குறிப்பிடப்பட வேண்டும்.)
அதிகமான அதிதிகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் மிக முக்கியமான விஷேட அதிதிகளை வேறாக குறித்துக்கொள்ளுதல்.
நினைவுபடுத்தப்பட வேண்டிய பொதுவான விடயங்கள் (உதாரணமாக பாதுகாப்பு தொடர்பானது, ஆபத்தின் போது வெளியேறுதல் போன்றன)
கலந்துகொள்வோர் பற்றிய பொதுவான தகவல்கள் (விருப்பு, பின்னணி, வயது, பால்)
குறிப்பிடப்பட வேண்டிய மேற்கோள்கள்,சுவாரஷ்யமானகதைகள்
உரையை எவ்வாறு ஆரம்பிப்பது, எவ்வாறுமுடிப்பது?
இவை எல்லாம் குறித்துக்கொள்ள வேண்டியதில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால், மேற்கூறிய தகவல்கள் உங்களிடம் இருக்கும் பட்சத்தில், நிகழ்ச்சி பற்றிய பூரண தெளிவு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் உரையில் அது வெளிப்படும்.
மேடையில் உரைகளை நிகழ்த்திய அனுபவம் குறைவாக இருந்தால், உங்களது உரை தயாராகியதும், உங்கள் நண்பர்கள் முன், வீட்டாரின் முன் அல்லது கண்ணாடியின் முன் பேசி பழகுங்கள். தமது தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமைவதுடன் உரையை செம்மைப்படுத்தவும் முடியும்.
வாழ்க்கையிலே மேடையில் ஏறாதவர்களாலும் வரவேற்புரை நிகழ்த்தலாம். ஆனால், பூரண தயார் நிலை இருக்க வேண்டும். பார்த்து உரை நிகழ்த்துவது பார்க்காமல் குறைபாடுகளோடு உரை நிகழ்த்துவதை விட சிறந்ததாக இருக்கும்.
No comments:
Post a Comment