நீரின்றி
அமையாது உலகு. நல்நூல்கள் இன்றி அமையாது அறிவார்ந்த உலகு. இதை உருவாக்குவதில்
நூலகங்களின் பங்கு மகத்தானது. ஆறு இல்லாத ஊர் மட்டுமல்ல நூலகம் இல்லாத ஊரும்
பாழானதே. ஆலயம் இல்லாத ஊரில் மட்டுமல்ல நூலகம் இல்லாத ஊரிலும் குடியிருக்க கூடாது.
நூலகங்கள் நம் அறிவின் மிகப் பெரிய தேடல் வெளி. நல்ல நிலத்தில் பயிர்கள் செழித்து
வளர்வது போல நல்ல நல்ல நூல்களை நாம் தேடிப்படிக்கும் போது நம் மனம் வளம் பெறும்.
தனி மனம் வளம் பெறும் போது சமூகம் வளம் பெறும். தியானத்திற்கு ஈடானது நூல்
வாசிப்பு.
சமரசம்
உலாவும் இடம்
நூலகங்களில்
கம்பீரமாக காட்சி தரும் நூல்கள் வரிசையில் பகவத்கீதை பக்கத்தில் பைபிள் இருக்கும்.
பைபிளை ஒட்டியே திருக்குரானும் இருக்கும். புத்தமும் சமணமும் ஒரே பாகத்தில் அடங்கி
இருக்கும். நூலகத்திற்குள் ஜாதி இருக்காது; மதம் இருக்காது.
அமைதியான சூழ்நிலையில் அவரவர் தேடல் தீவிரமாக இருக்கும். இங்கே இருந்து தான்
உன்னதமான சமூக கட்டமைப்பின் மையப்புள்ளி உருவாக்கப்படுகிறது. நீங்கள்
வீட்டுவரியுடன் நூலக வரியும் சேர்த்துதான் செலுத்துகிறீர்கள். இதை இருப்பாக வைத்தே
நூலகப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை தவிர நூல் இரவல் பெற காப்புத்தொகை,
ஆண்டு சந்தா என நீங்கள் செலுத்தும் சொற்ப தொகையும் இதில் அடக்கம்.
நூலக ஆர்வலர்கள் வழங்கும் புரவலர், பெரும் புரவலர், பெரும் கொடையாளர்கள் போன்ற வகையிலும் பெறப்படுகின்றன. உங்கள் பகுதியில்
செயல்படும் நூலகங்களுக்கு நீங்கள் வாசகர் வட்டம் மூலம் நூலக வளர்ச்சிப் பணிகளை
மேற்கொண்டால், இதைவிட புனிதப் பணி வேறெதுவும் இல்லை.
நூலகமும்
மாணவர்களும்
பள்ளியில்
பயிலும் மாணவர்கள் அனைவரையும் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், நூலக உறுப்பினராக்கி நூலக அருமையை உணர்த்த வேண்டும். வாரம் ஒரு முறை பள்ளி
மாணவர்களை வகுப்புவாரியாக சுழற்சி முறையில் அந்தந்த பகுதி நூலகங்களுக்கு
அழைத்துச்சென்று நூலகத்தை பயன்படுத்த வலியுறுத்த வேண்டும். மாணவர்கள் வாசித்த
நூல்களில் இருந்து வினாடி வினா, கட்டுரைப் போட்டி மற்றும்
இன்னும்பிற போட்டிகள் நடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
நூலகத்தில்
நவீன தொழில் நுட்பம்
கணினிகளின்
பயன்பாடு பெருகிவிட்ட நிலையில் வாசிப்பு பழக்கம் குறைந்துவருவதாக சொல்வதையும் நாம்
புறக்கணிக்க முடியாது. ஆனால் பில்கேட்ஸ், நூல்களை படிப்பதை
போன்று கம்ப்யூட்டரில் படிப்பது திருப்தியாக இல்லை என்கிறார். தற்போது நூலகங்களில்
இணையவழி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் நவீன கம்ப்யூட்டர் தொழில்
நுட்பங்களை நூலகங்களில் நுழைக்க வேண்டும். இதனால் நூலகப் பயன்பாடு பெருகும்.
நூலகங்களும்
தொண்டு நிறுவனங்களும்
கோல்கட்டாவில்
இருந்து செயல்படும் ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை நூலகங்களுக்கு பெருமளவில்
உதவுகிறது. இதைப் போல கிராமங்களில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் அந்தந்த
கிராமங்களில் இயங்கும் நூலகங்களை தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நூலக
சுற்றுப்புறத்தூய்மை,
வாசகர்களுக்கு பயன்தரும் நன்கொடை தளவாடங்கள் வழங்குதல் உள்ளிட்ட
தொடர் அறப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சிறைகள்
மூடட்டும்
ஆங்கிலத்தில்
'டுடே ரீடர்; டுமாரோ லீடர்' என்பார்கள்.
இசை கேட்டும், வாசித்தும் பழகாத சமூகம் வன்முறை எண்ணங்களையே
வெளிப்படுத்தும். ஒரு நூலகம் திறக்கப்படும் போது பத்து சிறைசாலைகள் மூடப்படும்,
என்ற அறிஞர் கருத்தை இறுகப்பற்றி நூலகம் செல்வது சாலவும் நன்று
என்பதை உணர்வோம். நூலகங்களை உயர்த்துவோம்.
No comments:
Post a Comment