அன்புள்ள மகனுக்கு...
அப்பா எழுதுவது
வசதியாக தான் இருக்கிறது மகனே
நீ கொண்டு வந்து சேர்த்த இல்லம்!
பொருப்பாய் என்னை ஒப்படைத்துவிட்டு
சலனமின்றி நீ வெளியேறிய போது
முன்பு நானும் இது போல்
உன்னை பள்ளியில்
விட்டு விட்டு செல்லும் போது!
என் முதுகுக்கு பின்னால்
நீ கதறக் கதற அழும்போது
என் கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
எனக்கு ஞாபகத்தில் வருகிறது!
தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை
அறிகையில் கூட அன்று உனக்காக
நானும் பொருத்தமான கல்லூரி எதுவென்று
ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!
இது வரையில் ஒரு முறையேனும்
நீ என்னைப் பார்க்க நீ வராமல் போனாலும்
என் செலவுக்கான பராமரிப்பு தொகையை
மாதம் தவறாமல்... மறக்காமல்...
அனுப்பி வைப்பதில்
என் மனம் மகிழ்ச்சி அடைகிறது!
நீ வெளியூரில் தங்கி படித்த காலத்தில்
உன்னை பார்க்க வேண்டும்
என்ற ஆவல் இருந்தாலும்
உன் படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததின்
எதிர் வினையே இதுவென்று
என்னால் உணர முடிகின்றன!
இளம் வயதில் நீ சிறுகச் சிறுக
சேமித்த அனுபவத்தை
என் முதுமை பருவத்தில்
மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய்.
ஆயினும் உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வித்தியாசம்
நான் கற்றுக் கொடுத்தேன்
உனக்கு வாழ்க்கை இதுவென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு உறவுகள் இதுவென்று..!!
Comments
Post a Comment