Monday, January 23, 2017

அன்னை பற்றி அப்துல் கலாம்



கடல் அலைகள், பொன் மணல்
புனித யாத்ரீகர்களின் நம்பிக்கை
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு
இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ
என் அன்னையே!
சுவர்க்கத்தின் ஆதரவுக் கரங்களாய்
எனக்கு நீ வாய்த்தாய்
போர்க்கால நாட்கள் என் நினைவிற்கு வருகின்றன
வாழ்க்கை ஒரு அறைகூவலாய் அமைந்த
கொந்தளிப்பான காலம் அது.
கதிரவன் உதிப்பதற்குப் பல மணி நேரம் முன்பே
எழுந்து நடக்க வேண்டும் வெகுதூரம்
கோயிலடியில் குடியிருந்த ஞானாசிரியரிடம்
பாடம் கற்கச் செல்லவேண்டும்.
மீண்டும் அரபுப் பள்ளிக்குப் பல மைல் தூரம்
மணல் குன்றுகள் ஏறி இறங்கி
புகைவண்டி நிலையச் சாலைக்குச் சென்று
நாளிதழ் கட்டு எடுத்து வந்து
அந்தக் கோயில் நகரத்து மக்களுக்கு வினியோகிக்க
வேண்டும்
அப்புறம்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்
இரவு படிக்கச் செல்லும் முன்
மாலையில் அப்பாவுடன் வியாபாரம்
இந்தச் சிறுவனின் வேதனைகளையெல்லாம்
அன்னையே, நீ அடக்கமான வலிமையால் மாற்றினாய்
எல்லாம் வல்ல ஆண்டவனிடமிருந்து மட்டுமே
தினசரி ஐந்துமுறை தொழுது
நீ உன் பிள்ளைகளுக்கு வலிமை சேர்த்தாய்
தேவைப்பட்டவர்களுடன் உன்னிடமிருந்த
சிறந்தவற்றை நீ பகிர்ந்து கொண்டாய்
நீ எப்போதும் கொடுப்பவளாகவே இருந்தாய்
இறைவன் மீது வைத்த நம்பிக்கையையும்
சேர்த்தே எதையும் நீ கொடுத்தாய்
எனக்குப் பத்து வயதாக இருந்தபோது
நிகழ்ந்தது நன்றாக நினைவில் நிற்கிறது.

ஒரு பவுர்ணமி நாள் இரவு அது
என் உடன் பிறந்தார் பொறாமை கொள்ள
நான் உன் மடியில் படுத்திருந்தேன்.
என் உலகம் உனக்கு மட்டுமே
தெரியும் என் அன்னையே.
நள்ளிரவில் நான் கண்விழித்தேன்
என் முழங்கால் மீது உன் கண்ணீர்த்துளி பட்டுஸ
உன் பிள்ளையின் வேதனை
உனக்குத் தானே தெரியும், தாயே?
உன் ஆதரவுக் கரங்கள்
என் வேதனையை மென்மையாய் அகற்றின.
உன் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும்
எனக்கு வலிமை தந்தன
அதைக் கொண்டே நான் இந்த உலகை
அச்சமின்றி எதிர்கொண்டேன்
என் அன்னையே,
நாம் மீண்டும் சந்திப்போம்
அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்!
***
நன்றி: டாக்டர். அப்துல் கலாம் (அக்னிச் சிறகுகள்)’

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...