Monday, January 11, 2016

நவீன தமிழ்க் கவிதை: வேர்களும்விழுதுகளும் ...




சுந்தர ராமசாமி

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் செயலாற்றும் என் ஆசிரிய நண்பர்களுக்கும் பிற ஆசிரியர்களுக்கும் எழுத்தாளர் களுக்கும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழியல் துறை சார்பிலும் பாரதிதாசன் அறக் கட்டளை சார்பிலும் இங்கு நடக்கவிருக்கும் நவீன தமிழ்க் கவிதை: வேர்களும் விழுதுகளும்என்னும் கருத்தரங்கத்தின் தொடக்கவுரையாற்ற வேண்டுமென்று கருத்தரங்கப் பொறுப்பாளர்களான என் நண்பர்கள் என்னைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முதலில் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்க் கவிதையை வரலாற்றுக் கண் கொண்டு பார்க்கிறபோது அதை மிகப்பெரிய கவிதைப்பூங்கா என்றுதான் சொல்ல வேண்டும். உலகிலேயே மிகப்பெரிய கவிதைப்பூங்கா நம்மிடம்தான் இருக்கிறது என்று கூடச் சொல்லலாம். இரண்டாயிரம் வருடங்களில் இந்தப் பூங்காவினுள் செடிகளும் கொடிகளுமாக, மொட்டுகளும் பூக்களுமாக, விதைகளும் பழங்களுமாக நாம் பெற்றுள்ள செல்வத்தை எளிய சொற்களில் விவரிக்க இயலாது. இதுவரை நமக்குப் பார்க்கக் கிடைக்காத புதிய செடிகளும் கொடிகளும் இப்போதும் அந்தப் பூங்காவினுள் முளைவிட்டுக் கொண்டிருக்கின்றன. புதிய அரும்புகளையும் புதியப் பூக்களையும் அங்கு பார்க்கிறோம். தமிழ்க் கவிதையின் செழுமைக்கு முடிவென்பது இல்லை. எல்லை என்பது இல்லை. பின்தங்கல் என்பது இல்லை. இந்தக் கவிதைச் செல்வத்தால் நம் மொழியின் வேர்கள் ஆழம் கொள்கின்றன. விழுதுகள் விரிந்து செல்கின்றன. தமிழ்க் கவிதையைப் பற்றிப் பேசும்போது இந்த மரபை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். இந்தக் கவிதை மரபு இல்லையென்றால் நமக்கு நம்பிக்கைகொள்ள வாழ்க்கையே இல்லை.
இம்மொழி தந்த ஆற்றலிலிருந்துதான் தமிழில் நவீனக் கவிதை தோன்றியிருக்கிறது. சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் தோன்றியிருக்கின்றன. இப்படிப் பார்க்கும்போது நவீன கவிதையை மொழியின் ஆற்றல் சார்ந்து, அதன் உள்ளார்ந்த வலு சார்ந்து, மரபுக் கவிதையின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும்.
இலக்கியத் தளத்தில் ஒரு தீவிரமான மாற்றம் நிகழ்ந்தால், அந்த மாற்றம் நிகழும் காலத்தையொட்டி நாம் வாழ்ந்து கொண்டிருப்போமென்றால், அது மிகப்பெரிய மாற்றம் என்றுதான் தோன்றும். மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதைக்கு நாம் மேற்கொண்ட பயணம், இன்று நமக்குப் பெரிய பாய்ச்சலாகத்தான் தெரியும். எதிர்காலத்தில் பின்திரும்பிப் பார்க்கும்போது இந்தப் பாய்ச்சல் ஒரு அடிச்சுவடுவிலிருந்து மற்றொரு அடிச்சுவடுக்குக் காலெடுத்து வைப்பதுபோல் இயற்கையான ஒன்றாக இருக்கும். இதுபோன்ற மாற்றங்கள் இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பும் பலமுறை நிகழ்ந்திருக்கின்றன. அதேபோல்தான் மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதையை நோக்கியப் பாய்ச்சலை நாளை வரும் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இயற்கையாகவே எடுத்துக்கொள்வார்கள்.
இங்கு நான் குறிப்பிட முற்படுவது மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதைக்கு வந்த காலகட்டத்தை நாம் தீவிரமான மாற்றம் நிகழ்ந்த காலமாகக் கருதவேண்டியதில்லை என்பதல்ல. நானே கவிதை ஜனநாயகப்பட்ட காலமாக அதைக் கருதுகிறேன். கற்றறிந்தோரிடமிருந்து கவிதையைச் சாதாரண மக்கள் பிடுங்கிக் கொண்ட செயல்பாடாகத்தான் அதைப் பார்க்கிறேன்.
தீவிரமான மாற்றங்களைக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மொழியில்தான் கவிதைகள் உயிர்ப்புப் பெறுகின்றன. தன்னைப் பின்னகர்த்தும் காலத்துக்கு விட்டுக் கொடுக்காமல் காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொண்டு, அந்தக் காலம் அளிக்கும் அனைத்துச் சவால்களையும் ஏற்றுக்கொண்டு, கவிதையை நோக்கி வருகிறவர்களைத் திருப்திப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் மிகப்பெரிய மனவெழுச்சியைத் தருகின்றன. சொற்களில் விவரிக்க இயலாத பேரனுபவங்களைத் தருகின்றன.
மரபுக் கவிதை நவீன கவிதையாக மாறிய சந்தர்ப்பத்தில் வழக்கம்போல் நம் மொழியிலும் அதை, பதற்றத்துடன்தான் பார்த்தார்கள். அந்தக் காலத்தில் நட்பு சார்ந்த விவாதத்தில் என்னை சுலபமாகத் தோற்கடித்தவர்கள் என்று பேராசிரியர் கைலாசபதி, தொ.மு.சி. ரகுநாதன், நாவலாசிரியர் நா. பார்த்தசாரதி, சிறுகதை எழுத்தாளர் கு. அழகிரிசாமி ஆகியோரை நினைவுகூர முடிகிறது. அவர்களுடன் நடந்த விவாதங்களில் நான் பெற்ற தோல்வியை மனத்திற்குள் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்க் கவிதைக்குக் காலத்தால் ஏற்பட்டிருக்கும் சோதனையை அவர்களிடம் விளக்கிச் சொல்ல எனக்குத் தெரியவில்லை. இன்றைய கவிதை நாம் இப்போது எதிர்கொள்ளும் காலத்துடன் உறவு கொள்ள வேண்டுமென்றால் - அதாவது இன்றைய வாழ்க்கையுடன் உறவுகொள்ள வேண்டுமென்றால் - இன்றைய வாழ்க்கையின் சாரம் அந்தக் கவிதையில் பிரதிபலித்தாக வேண்டும். முகத்தைக் காட்டாத கண்ணாடியை அலங்கார மேசை மீது யாரும் பொருத்தி வைத்துக் கொள்வதில்லை.
நான் கூறிய நான்கு நண்பர்களும் நவீன இலக்கியத்தின் மீது அக்கறை கொண்டிருந்தவர்கள்தான். உலகக் கவிதை அடைந்து வரும் மாற்றத்தைப் பற்றியும் அறிந்தவர்கள்தான். இருப்பினும் அவர்களுக்குப் பழைய தமிழ்க் கவிதையின் உருவங்களிலிருந்து விலகி வந்தால் கவிதையையே இழந்து விடுவோமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கலாம்.
தமிழ்ப் புலவர்கள் வெளிப்படை யாகத் தங்கள் கருத்துக்களை முன்வைக்கவில்லை என்றாலும் நவீன கவிதையை அவர்கள் முற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை. கவிதைத் திறன்நூலில் மு.வ. அளித்திருந்த வரவேற்பை ஒரு விதிவிலக்கான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் நீங்கலாக பிறர், நவீனக் கவிதைகள் தழுவிக்கொண்ட பொருளையும் ஏற்கவில்லை; அக்கவிதைகளின் அமைப்பையும் ஏற்கவில்லை.
தமிழைக் கற்றறிந்தவர்கள் ஒருபக்கம். சொல்லும்படி எந்தத் தகுதியும் இல்லாமல், தாங்கள் கனவு காணும் கவிதையின் முகம் பற்றி கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாமல், புதுமையான கவிதைக்கு மனம் கொள்ளும் விழைவுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் ஒரு பக்கம். இந்த இளைஞர்கள்தான் புதிய கவிதையைத் தமிழில் உருவாக்கிக் காட்டினார்கள். நவீன கவிதையை வரவேற்றவர்களையும் வரவேற்காதவர்களையும் இப்படித்தான் நீங்கள் வகைப்படுத்தி ஏகதேசமாகப் புரிந்துகொள்ள முடியும். உருவாக்கப்பட்ட புதிய கவிதையின் கூறுகளும் குணங்களும்தான் தம் இருப்புக்காகப் போராடி வெற்றி பெற்றன. அன்று உருவான கவிதைகள் அவற்றின் அமைப்புச் சார்ந்து கவிதை என்று ஏற்றுக்கொள்ள பலருக்கும் பிரச்சனை இருந்தது. ஆனால் கவிதைக்குரிய அனுபவத்தைத் தந்தபின் அதன் அமைப்பை எந்த அளவுக்கு நம்மால் விமர்சனம் செய்ய முடியும்? இயற்கையான காற்று வீசும்போது மின்விசிறி இல்லாமல் எப்படி காற்று வருகிறது என்று கேட்க முடியுமா? ஒரு இலக்கிய உருவத்தின் அனுபவத்தைப் பெற்றபின் தத்துவம் சார்ந்தோ, கோட்பாடு சார்ந்தோ, உள்ளடக்க உருவங்கள் சார்ந்தோ அதை மறுத்துப் பேச முயன்றால் அந்த நியதிகள் வெற்றிபெறா. கவிதையின் குணம் கவிதையை நேசிக்கக் கூடியவனின் மனதிற்குள்தான் இருக்கிறது. இலக்கணப் புத்தகங்களில் இல்லை. புதியவழி வந்த கவிதைகளை கவிதைஉள்ளங்கள் ஏற்றுக்கொண்டபோது அக்கவிதைகள் நிலைபெற்றன.
1940க்கு முன்னாலேயே புதிய கவிதையை எழுப்ப பலர் முயன்றார்கள். உடனடியாக நம் நினைவுக்கு வரும் பெயர்கள் ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், வல்லிக்கண்ணன் ஆகியோர். ஆனால் அப்போது புதுக்கவிதையை ஏற்கும் காலம் போதிய அளவுக்குப் பக்குவப்பட்டிருக்கவில்லை. பாரதிதாசனின் முக்கியமான கவிதைகள் அனைத்தும் வெளிவந்த பின், 1959இல் எழுத்துஇதழ் தோன்றும் காலம் வரையிலும் தமிழில் செயல்பட்ட முக்கியமான கவிஞர்கள் யார்? கவிதையை நேசிக்கும் மனம் இந்தக் காலத்தைச் சேர்ந்த கவிஞர்களாக யார் யாரை இனம் கண்டு கொண்டது? 1950இல் நான் எழுத ஆரம்பித்த காலத்தில் என்னைச் சுற்றிவர கவிதைகள் இருந்தன. ஆனால் நான் விரும்பும் கவிதைகள் எதுவுமில்லை. சுத்தானந்த பாரதி, ச. து. சு. யோகி, கவிமணி எல்லோருமே தேய்ந்து போகத் தொடங்கியிருந்த காலம். அவர்களுக்குப் பின்னால் வந்த கலைவாணன்-இவர் திருச்சியைச் சேர்ந்தவர் என்று ஞாபகம் - முடியரசன் போன்றவர்கள் நிறைய எழுதிக் குவித்தவர்கள்தான். நம் மனம் அந்தக் காலத்தில் எந்தக் கவிதைக்காக ஏங்கிக்கொண்டிருந்ததோ அந்தக் கவிதையை அவர்களால் தர இயலவில்லை. தொட்ட மாத்திரத்திலேயே நீங்கள் அவர்களைப் பழமைவாதிகளாக இனம்கண்டு கொள்ளலாம். நிலப்பிரபுத்துவச் சிந்தனைகளில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள் என இனங்கண்டு கொள்ளலாம். காலத்திற்கு ஒவ்வாத மதிப்பீடுகளில்தான் அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
இரண்டு மகா யுத்தங்களையும் எதிர்கொள்ள நேர்ந்த மனிதன் எப்படிப் பார்த்தாலும் 1914க்கு முற்பட்ட மனிதன் அல்ல. போர் மனித வாழ்க்கையில் நிகழ்த்திய பாதிப்பை நுட்பமாகவும் உணர்வுபூர்வமாகவும் எந்த மனங்களால் உணர்ந்துகொள்ள முடிந்ததோ அந்த மனங்கள்தான் அந்தக் காலத்து வாழ்க்கையின் துக்கத்தைச் சொல்லக்கூடிய கவிதையையும் படைத்துக் காட்டியன. அன்று ஏற்பட்ட நெருக்கடிகளை அவனால் ஆத்மீகம் சார்ந்தோ அல்லது லோகாயுதம் சார்ந்தோ தீர்த்துக்கொள்ள முடியவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளின் அளவு கூடிக்கொண்டே போகிறது. ஆனால் மனித துக்கத்தின் அளவை அவற்றால் குறைக்க முடியவில்லை. நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்று சொல்வது சுலபம். ஆனால் எதை நம்பி வாழ வேண்டும் என்ற கேள்விக்கு அன்றையச் சூழலில் நிறைவான பதில் கிடைக்கவில்லை. நேற்றைய ஒழுக்கங்களும் நியதிகளும் அடிபட்டுப் போய்விட்டன. புதியவை மலரவுமில்லை. மனிதனைக் கருப்பு வெள்ளையாகப் பிரித்துப் பார்க்கும் கற்பனை காலாவதியாகி விட்டது. மனிதன் உய்ய வழிகூறும் கருத்துக்களின் தொகுப்பு - அவை சமயம் சார்ந்ததாக இருக்கட்டும் அல்லது அனைவரையும் தழுவிக் கொள்ளும் பொது நீதிகளாக இருக்கட்டும் - அவற்றைக் கற்றறிந்து வாழ்க்கையைக் கொண்டு செலுத்துவது சாத்தியம் அல்ல என்ற முடிவுக்கு மனிதன் வந்திருந்தான். அறிவுரை தரும் சகமனிதன் மீது அவனுக்குத் தாங்க முடியாத அலுப்பு ஏற்பட்டிருந்தது. மனிதனிடம் மனிதனுக்குரிய இதயத்தை உருவாக்குவதில் கலைகளும் இலக்கியங்களும் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன என்ற கேள்வி கூர்மைப்பட்டது. காலத்தை வட வேங்கடம் தாண்டியும் உற்றுப் பார்க்கிறவர்களுக்கு இந்த உண்மைகள் தெரியவந்தன. இவற்றைத்தான் நவீனக் கவிதையின் சர்வதேசப் பின்னணியாக நாம் கொள்ள வேண்டும். பிற இலக்கியங்களின் மரபுகளும் நம்மைப் பாதிக்கும் நிலையில் தமிழ் மரபை காற்றுப் புகாத ஒரு இடத்தில் நாம் பூட்டி வைத்துக்கொள்ள முடியாது.
கவிதை என்றால் என்ன என்ற பொதுக் கேள்விக்கு இன்று அர்த்தமில்லை. இரண்டாயிர வருடக் கவிதை மரபையும் உள்ளடக்கிக் கொள்ளும் ஒரு விளக்கத்தை இன்று நாம் அளிக்கவும் முடியாது. விவேகமான கேள்வி, இந்தக் காலத்துக்குரிய கவிதை எது என்ற கேள்விதான். அதற்கான விளக்கத்தை ஏகதேசமாக நாம் நினைவு கூர்ந்து பார்த்துக்கொள்ள முடியும்.
1. இந்தக் காலத்துக் கவிதையில் உபதேசியோ, அறிவுரைகளை அள்ளித் தெளிப்பவனோ கவிதை வாசகர்கள் அனைவரையும் மாணவர்களாகக் கருதும் பேராசிரியரோ இல்லை என்பதை முதலில் சொல்லிவிடலாம். தமிழில் பெரும்பான்மையான கவிஞர்கள் இந்தப் பொறுப்புக்களை இன்றும் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லை. புரட்சித் தலைவரைப் பற்றியும் கலைஞரைப் பற்றியும் புரட்சித் தலைவியைப் பற்றியும் அவரவர் ஆட்சி செய்த காலங்களில் பாராட்டிக் கவிதை எழுதியுள்ள கவிஞர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? இருந்தாலும் மக்களுக்கு அறிவுரை கூறுவதை அவர்கள் விட மாட்டார்கள்.
2. இன்றைய கவிதைகளில் கவிஞன் தனக்குத் தெரிந்தவை, தன் காலத்தில் பிறருக்கும் தெரிந்திருக் கக்கூடும் என்று நம்புகிறான். இந்த நம்பிக்கைதான் அவனுக்கு நாகரிகமாகப்படுகிறது.
3. இந்தக் காலத்துக் கவிஞனிடம் வாழ்க்கைப் பிரச்சனைக்கு ஆயத்த விடை என்று எதுவுமில்லை. நான் காட்டும் வழியைப் பின்பற்றி வாருங்கள், நீங்கள் உய்ய வழி சொல்கிறேன் என்று அவன் நம்மைப் பார்த்துக் கூறுவதில்லை. உங்களைப்போல் நானும் விடை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை மிக அற்புதமாகவும் அழகாகவும் நம் மனதில் ஆழ்ந்து பதியும் படியாகவும் அவன் சொல்கிறான்.
4. அவனுக்கு என்று சொல்ல கதைகள் எதுவுமில்லை. கருத்துக்கள் எதுவுமில்லை. இந்த இரண்டு கூறுகளையும் இவற்றின் உப கூறுகளையும் அவன் உரைநடைக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டான். அவனிடம் இன்று இருப்பவை அனுபவங்கள். அவனுக்குச் சரிசமமான மனிதனாக நம்மைக் கருதி அந்த அனுபவங்களை மனந்திறந்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறான்.
5. கவிதை எந்த அனுபவத்தையும் கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் வழிகாட்டி நூல்கள்போல் நேராகச் சொல்லி விடுவதில்லை. நேராகச் சொன்னால் இன்னும்
எனக்கு நன்றாகப் புரியுமே என்று வாசகன் காலம் காலமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறான். பெரும்பாலும் இப்படிச் சொல்லு கிறவர்கள் கவிதைக்கு வெளியே நிற்கும் உரைநடை வாசகர்கள்தான். அவர்களுக்குக் கவிதை தவிர்க்க முடியாத தேவை அல்ல.
6. கவிஞர்கள் கவிதைக்குள் மௌனங்களை வைத்துக்கொள்ள பெரும் விருப்பம் கொண்டவர்கள். தம்பட்டம் அடிப்பதோ, குரலெடுத்துக் கத்துவதோ, கைதட்டல்களை எதிர்பார்த்து வரிகளை அவிழ்ப்பதோ, வெட்கம்கெட்ட புகழ்ச்சிகளில் நம்பிக்கை வைப்பதோ, மேலான கவிதைகளைப் படைக்க விரும்பும் கவிஞனின் செயல்பாடுகள் அல்ல. அவனுடைய குரல், குரல்வளையிலிருந்து வெளிவரவில்லை. அவன் நெஞ்சின் நடுமையத்திலிருந்து வெளிவருகிறது. வாசகனின் மனங்களை அது நேராகச் சென்று தொடுகிறது. அதை ஊழஅஅரniஉயவழைn என்று சொல்வதைவிட உழஅஅரnழைn என்று சொல்வது பொருத்தமானது.
இதுபோன்ற விதிகள் எல்லாம் 1959 வாக்கில் தமிழகத்தில் வௌ;வேறு இடங்களில் வாழ்ந்த, ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாத இளைஞர்களுக்கு ஏகதேசமாக ஒரேபோல் தோன்றத் தொடங்கியிருந்தன. இவர்கள்தான் புதுக்கவிதைகளை உருவாக்கினார்கள். அதன்பின் புதுக்கவிதைக்கு எத்தனையோ முகங்கள் இன்று வரையிலும் தோன்றி விட்டன. ஒவ்வொரு விமர்சகனுக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் வௌ;வேறு முகங்கள் பிடித்திருக்கின்றன. அது நல்லதுதான். அப்படித்தான் இருக்கவும் வேண்டும். மாறுபட்ட விருப்பங்கள், மாறுபட்ட கோட்பாடுகள், கொள்கைகள், தத்துவங்கள், நம்பிக்கைகள் இவற்றிற்கு இடையே நடைபெறும் இடைவிடாத மோதல்கள்தான் சமூக வளர்ச்சிக்கும் சரி, இலக்கிய வளர்ச்சிக்கும் சரி காரணமாக அமைகின்றன.
பிச்சமூர்த்தியிலிருந்து இன்று எழுதிக்கொண்டிருக்கும் குட்டி ரேவதி வரையிலும் யார் யார் கவிதை எழுதியிருக்கிறார்கள் என்ற பட்டியலைத் தருவது துவக்க விழாவில் உரையாற்றுபவனின் பணி அல்ல என்றே நினைக்கிறேன். இனிமேல் இங்கு நடக்கவிருக்கிற இரண்டு நாள் விவாதங்களில் பல்வேறுபட்ட அபிப்பிராயங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நிகழும். பல்வேறுபட்டப் பார்வைகளைச் சேர்ந்த கவிஞர்களும் விமர்சகர்களும் பேராசிரியர்களும் கவிதையைப் பற்றிய தங்கள் எண்ணங்களைக் கூற இருக்கிறார்கள். எந்த அளவுக்கு மனந்திறந்த விவாதத்திற்கு நாம் தயாராக இருக்கிறோமோ, எந்த அளவுக்கு, பிறர் நமக்கு அதற்கான சுதந்திரத்தைத் தருகிறார்களோ அந்த அளவுக்குக் கருத்தரங்குகள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும். பிறருடைய கருத்துக்களை, அவை மாறுபட்டவையாக இருக்கும் போதும் சரி, அவற்றைப் பொறுமையாகக் கேட்கவும் மாறுபட்ட கருத்துக்களை உணர்ச்சி வசப்படாமல் தெளிவாகவும் கூர்மையாகவும் சொல்லவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இலக்கிய உலகில் எந்தக் கருத்தும் சுலபமாகத் தன்னை ஊன்றிக்கொண்டு விடுவதில்லை. கவிதை பற்றிய கருத்துக்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்களும் அல்ல. மிகச் சிறப்பாக இந்தக் கருத்தரங்கங்கள் நடைபெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
கடந்த பத்து ஆண்டுகளில் கவிதை உலகில் நிகழ்ந்த மாற்றங்களை நாம் நினைவுகூர்ந்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். இங்கு நாம் உருவாக்க இருக்கும் விவாதங்களுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கலாம். கடந்து பத்து ஆண்டுகள் நவீன கவிதைகளின் மரபில் மிக முக்கியமானவை. நாம் பொருட்படுத்தத் தகுந்த பெண்
கவிஞர்கள் இந்தக் காலகட்டத்தில்தான் தோன்றினார்கள். அதற்கு முன்னரும் பெண்கள் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள் என்றாலும்கூட, பெரும் பாலும் அவர்களால் சம்பிரதாய உலகத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை. மரபின் காலாவதியாகிவிட்ட சுமைகளைத் தான் அவர்களது கவிதை மொழிகள் சுமந்துகொண்டிருந்தன.
தமிழில் பெண்களுக்குரிய கவிதைமொழியைப் படைத்தவர் என்று இரா. மீனாட்சியைச் சொல்ல வேண்டும். எழுத்துஇதழின் காலத்தில்தான் அவரும் தோன்றினார். அவருடைய மாறுபட்ட பார்வை சி.சு. செல்லப்பாவுக்கு அவ்வளவு உகந்ததாக இருக்க வில்லை. பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று நாம் நம்புகிற அடக்கம் சற்றுக் கூடுதலாக செல்லப்பாவின் எதிர்பார்ப்பில் இருந்தது. நவீன காலத்தில் தோன்றிய பல பெண்களால் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து தரமுடியவில்லை. மீனாட்சி சீராக செயல்பட்ட ஒரு கவிஞர் அல்ல. அவரது கவனங்கள் பல்வேறு பணிகளில் சிதறிக்கிடக்கின்றன. இப்போதுதான் முதன் முதலாக அவருடைய கவிதை கள் அனைத்தும் ஒரே தொகுப்பாக நமக்குப் படிக்கக் கிடைத்திருக்கிறது. இந்தத் தொகுப்பு எப்படி ஆண் பார்வையிலிருந்து அவர் வேறுபட்டுப்போகிறார் என் பதைக் காட்டும்
சென்ற பத்தாண்டுகளில் முக்கியமாக வெளிப்பட்டிருக்கும் பெண்கவிகள் என்று சல்மா, குட்டி ரேவதி, உமாமகேஸ்வரி ஆகியோரைக் குறிப்பிடலாம். சுயதுக்கத்திலிருந்து கவிதையைத் தேடி இவர்கள் தொடங்கும் பயணங்கள் மனித துக்கங்களைச் சென்றடைகின்றன. பெண்களுக்கு வாழ வெளியில்லை என்பதைப் பற்றித்தான் இந்த மூன்று பேருமே சொல்கிறார்கள் என்று இவர்களது பொதுக் குணத்தை வைத்து வரையறுக்கலாம். ஆனால் வெளி இல்லாத நிலையே ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. மூச்சுத் திணறலுக்கான காரணங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன. சிலருக்கு வாய்ப்பூட்டு என்றால் வேறு சிலருக்குக் கைவிலங்கு. கைவிலங்கில்லை என்றால் கால்விலங்கு. அவர்கள் தங்களைப்பற்றி யோசித்துப் பார்க்கும்போது என்னென்ன விஷயங்கள் அவர்களுக்கு மனநிறைவைத் தருமோ அந்த விஷயங்கள் அவர்களுக்கு இல்லை. அவர்களது வாழ்க்கையில் எந்தெந்த விஷயங்களைப் பார்த்து ஊரும் உலகமும் அவர்கள் நிறைவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று கருதுமோ, அவை ஒன்றும் அவர்களுக்கு நிறைவான வாழ்க்கையைத் தரவில்லை. இங்கு நடைபெறவிருக்கும் கருத்தரங்குகளில் இந்தப் பெண் கவிகள் விசேஷமான கவனத்திற்கு ஆளாவார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் தமிழ் பெற்றிருக்கும் புதிய முகம் இது. இந்த முகத்திற்கு நாம் உரிய மரியாதை தந்தால் மேலும் பல பெண்கள் இந்த வரிசையில் வருவார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். பெண்களுடைய விடுதலைக்கு மட்டுமல்ல ஆண்களுடைய விடுதலைக்கும் இவர்களுடைய வருகை தேவை. இத்துடன் என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்.
(திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கூட்டத்தில் 15.04.03 அன்று ஆற்றிய உரை)

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...