முனைவர் பூ.மு. அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்,
ஜேப்பியார் பல்கலைக்கழகம்,
ராஜீவ்காந்தி சாலை, சென்னை-600119.
பேச:98424 95241.
முன்னுரை
செயற்கரிய செய்வார் பெரியர் என்னும் வள்ளுவரின் வாய்மொழிக் கேற்பச் செயற்கரிய செயல்கள் புரிந்து செயல் வீரர் என்று புகழப்படுபவர் காமராஜர்.பாரதத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல் விடுதலை பெற்ற பாரதப் பெருநாட்டின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் காமராசர். தலைநிமிர்ந்த தமிழகத்தைக் காணவிரும்பி, அயராது உழைத்த தன்னலமற்ற தலைவர் காமராசர்.
தோற்றமும் இளமையும்
காமராசர் 1903, சூலை 15-ஆம் நாள் விருதுநகரில் பிறந்தார். தந்தை குமாரசாமி, தாயார் சிவகாமி அம்மையார். தந்தையை இளமையிலேயே இழந்த காமராசர் தம் படிப்பை இடையிலே நிறுத்திவிட்டார். தம் மாமாவின் கடையில் வேலை செய்தார். செய்தித்தாள்களைப் படித்தும், தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும், அரசியலறிவையும், நாட்டுப் பற்றையும் வளர்த்துக் கொண்டார். அவையே அவரை விடுதலைப் போரில் ஈடுபடத் தூண்டின.
விடுதலைப் போரில்
காமராசர்
விடுதலை வீரர் சத்தியமூர்த்தியின் வாரிசாக விளங்கியவர் காமராசர். அண்ணல் காந்தி படிகளின் அறைகூவலை ஏற்று உப்புச் சத்தியாக்கிரகப் போரில் கலந்துகொண்டார். அண்ணலின் ஒத்துழையாமை இயக்கம், அந்நியத் துணி எரிப்பு, சட்ட மறுப்பு இயக்கம், 1942-இல் நடந்த ஆகஸ்டுப் புரட்சி முதலிய போராட்டங்களில் கலந்துகொண்டார். தமது பன்னிரண்டாம் அகவையில் அடிமட்டத் தொண்டராய் அரசியலில் நுழைந்த காமராசர் 8 ஆண்டுகள் சிறையில் அல்லற்பட்டார்.
முதலமைச்சர் பதவி
1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.
மிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை. ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார். அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட
மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு
கல்விப் பணிகள்
செயல்வீரராய் விளங்கிய காமராசர் 1954 முதல் 1963 வரை ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராய் விளங்கினார். 'கல்வி சிறந்த தமிழ்நாடு' என்ற புகழ் பெற்றதாக இருந்தாலும் தமிழக மக்கள் அனைவரும் கற்றவராகவில்லையே என்று காமராசர் வேதனைப்பட்டார். அதனால், ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்தார். கல்வியின் அருமை பெருமைகளை அறிந்திருந்த காமராசர் கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி, பகல் உணவுடன் கூடிய கல்வி எனப் பல திட்டங்களை உருவாக்கித் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு
கல்விக்கு அளித்த
முக்கியத்துவம்
அவர் நல்லாட்சியில் கல்வித்துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார். பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார். எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார். ஏழை சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தார்.
ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார். அவர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதன மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார். அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது.
வேளாண்மையும்
தொழிற்துறையும்
காமராஜரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது. வைகை அணை, மணிமுத்தாறு அணை, கீழ்பவானி அணை, பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன. தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார் காமராஜர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாயின. அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்.
காமராஜர் திட்டம்
இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் பணிக்குழு. அந்தத் திட்டத்திற்கு 'காமராஜர் திட்டம்' என்றே பெயரிடப்பட்டது. தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அந்த அதிசய தலைவர். அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய், எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தந்தார் ஜவகர்லால் நேரு, அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.
இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அந்த இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை 'கிங்மேக்கர்' என்று அழைத்தனர் பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும். தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே குறியாக இருந்தார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தனது 72-ஆவது அகவையில் காலமானார்.
எளிமையான வாழ்வு
அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரிய “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர். ஆம் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
தன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா? சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய பந்தா எப்போதும் அவரிடம் இருந்ததே இல்லை எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும், கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு. அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?
முறையான கல்விகூட இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வுளவும் செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்” நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும், நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும், சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம். அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும். வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்!
நாட்டுப்பணி
தமிழகமெங்கும் பல்வேறு அணைகளைக் கட்டி நீர்வளத்தைப் பெருக்கினார்; நிலவளத்தை உயர்த்தினார்; நாடெங்கும் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவினார்; மின் உற்பத்தியைப் பெருக்கித் தொழில்துறையில் தமிழ்நாடு முன்னேற்றம் அடையச் செய்தார்; ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் காப்புறுதி, ஓய்வூதியம், வைப்பு நிதி ஆகிய முப்பெருந் திட்டங்களைக் கொண்டுவந்தார்.
படிக்காத மேதை
ஆட்சி, கட்சி, பொதுவாழ்வு அனைத்திலும் கண்டிப்புக்குப் பெயர் பெற்றவர் காமராசர். எந்தச் சிக்கலையும் எளிதில் தீர்க்கும் அறிவுக் கூர்மை படைத்தவர். நான் பாடப் புத்தகத்தில் புவியியலைப் படிக்கவில்லை. ஆனால், நாட்டில் எத்தனை ஏரி குளங்கள் உள்ளன. அவற்றின் நீர்வளத்தை உழவுத் தொழிலுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று எனக்குத் தெரியும்” என்று கூறுவார். இதனால், காமராசர் “படிக்காத மேதை” எனப் போற்றப்படுகிறார்.
காமராசரின் பண்புநலன்கள்
காமராசர் உயர்பண்புகளின் உறைவிடமாய் வாழ்ந்தவர். காட்சிக்கு எளியவர்; சுருக்கமாய்ப் பேசுபவர்; செயலில் வீரர்; தமக்கென வாழாது நாட்டுக்காக வாழ்ந்த தியாகி; வாழ்நாள் முழுவதும் செல்வ வாழ்க்கையில் நாட்டமின்றி வாடகை வீட்டிலே வாழ்ந்து மறைந்த தியாகச் செம்மலாவார்.
முடிவுரை
எளிய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உழைப்பாலும் தன்னலமற்ற நாட்டுப் பற்றாலும் நாடு போற்றும் நல்ல தலைவராக விளங்குகின்றார். அவரது வாழ்க்கைநெறி இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்றத் தக்கதாகும்.